ஆனந்தம் அண்ணை

http://www.padalay.com/2017/10/blog-post_12.html

மனிதர்களை எப்படி இலகுவில் கடந்துபோய்விடுகிறோம் என்பது புரியாத புதிராக இருக்கிறது.  ஆனந்தம் என்று ஒரு அண்ணை. அப்பாவின் உதவியாளர். நவாலியில் வசித்தவர். நெடுவல். நெடுவலுக்கேற்ப முகமும் நீளம். பற்களும் நீளம். அவற்றில் ஒன்றிரண்டைக் காணக்கிடைக்காது. மீதம் வெற்றிலைச்சாயம் படிந்திருக்கும்.  அண்ணை தன் ஒரு காலைக் கொஞ்சம் தாண்டித் தாண்டியே நடப்பார். ஏன் அப்படி என்று தெரியாது. போலியோவாக இருக்கலாம். அல்லது … தெரியாது. அண்ணர் நன்றாகச் சிங்களம் கதைப்பார். சிங்களப்பாட்டு பாடுவார். ‘சந்திராவே மேபாவே நாவா’ என்று என்னைப் பாடசாலைக்கு அழைத்துச்செல்லும்போது பாடிக்கொண்டே சைக்கிள் மிதிப்பார்.
வீட்டில் என்ன வேலை என்றாலும் ஆனந்தம்தான். தோட்டம் கொத்துவதா, அடுப்படி மெழுகுவதா, சந்தைக்குப்போவதா, முற்றம் கூட்டுவதா, கோழி உரிப்பதா, பனை தறிப்பதா, கிணறு இறைப்பதா, எல்லாவற்றையும் ஆனந்தம் அண்ணைதான் செய்வார். கூடவே நான் விளையாடக்கூப்பிட்டாலும் வருவார். என்னை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடுவார். சாப்பாடுகூட எனக்கு அவர்தான் தீத்தவேண்டும். அவர் கடைக்குப்போகையில் என்னையும் கூட்டிப்போகவேண்டும். வெற்றிலை, சீவல் போடும்போது சின்ன நறுக்கு ஒன்றை அம்மாவுக்குச் சொல்லக்கூடாது என்று ‘உஷ்’ சொல்லித் தருவார். சுண்ணாம்பு தரமாட்டார். எங்கள் வீட்டுக்கு லச்சுமியைக் கொண்டுவந்ததும் அவர்தான். லச்சுமிதான் குட்டியனின் அம்மா.  கொல்லைப்புறத்துக் காதலிகளில் எழுதியிருப்பேன். முன்னேறிப் பாய்தல் சமயம் ஆனந்தம் அண்ணையின் குடும்பம் மொத்தமாக எங்கள் வீட்டுக்கு இடம்பெயர்ந்து வந்தது. நான்கைந்து குழந்தைகள். நிறைய ஆடுகள். இரண்டு கறவை மாடு. அவரின் இரண்டாவது மகன் ஒரு சுட்டி. நான் எங்கள் வீட்டு விலாட்டுமரத்தில் ஏறி மாங்காய் பிடுங்கிப்போட்டால் அவன் அதை உரப்பையில் தாங்குவான். மாங்காயை மதில்சுவரின் குற்றி உடைத்து, உப்பும் தூளும் போட்டுக்கொடுத்தால் உச்சுக்கொட்டிக்கொண்டே சாப்பிடுவான்.  அம்மா மீன் பொரித்தால் அண்ணருக்கும் மணந்துவிடும். வந்து நிற்பார். அன்றைக்கு என் பங்கில் இடி விழும். ஆனந்தம் அண்ணை

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

தொடர்பு பட்டவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *